சேமநல நிதியை தமிழக அரசு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் இன்று மாநிலம் தழுவிய நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
தமிழக அரசு வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதியாக ரூ.2 லட்சம் வழங்கி வருகிறது. இதை ரூ.5 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் என்றும் இதற்காக வழக்கறிஞர்கள் நலநிதி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
காவல்துறை அதிகாரிகள் மூத்த நீதித்துறை அலுவலர்கள் ஆகியோரிடமிருந்து வழக்கறிஞர்களை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வழக்கறிஞர்கள் தமிழகம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள். கீழ்நிலை நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊர்வலம் சென்றனர். அப்போது, சேமநலநிதியை 5 லட்சம் ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி தர வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பிரபாகரன் தலைமையில் உயர் நீதிமன்ற வளாகத்தில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் சென்றனர்.
வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாக நீதிமன்றத்திற்கு வெளியே கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.