செ‌ன்னை‌யி‌‌ல் கட்-அவுட்டுகள், போர்டுகள் வைக்க வேண்டாம்: கருணாநித‌ி!

வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (11:46 IST)
''சென்னையின் அழகு மிளிர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், பிரமாண்ட கட்-அவுட்டுகள், போர்டுகள் வைக்க வேண்டாம்'' என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் கண்டு எரிச்சல் அடைகிற அளவுக்கு ஆடம்பரம் மிகுந்த வண்ண வண்ண சுவரொட்டிகள், விதவிதமான உருவப் படங்கள், ஏடு கொள்ளாத அளவுக்கு எண்ணற்ற விளம்பரங்கள், விமர்சனத்துக்கும், வெறுப்புக்கும் வழிவகுத்திடும் வாசகங்களும், புகைப்படங்களும் கொண்ட சுவரொட்டிகள் மற்றும் படங்கள் நிறைந்த விளம்பரங்களில் ‌தி.மு.க.‌வின‌ர் இனி ஈடுபடக் கூடாது என்று அறிவித்திருந்தேன். அதனைப் பொதுவான நிலையில் கட்சி ஏடுகள், கட்சி சார்பற்ற சில ஏடுகள் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர்.

முன்பொரு முறை அறிவித்து அது செயல்படாத நிலையில் இருப்பதையும் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் சுட்டிக் காட்டியுள்ளதோடு, அவரும் என் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார். எனவே, மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தவிர்க்க முடியாத செய்திகள், நிகழ்வுகளைத் தவிர விளம்பர ஆடம்பரங்களை ‌தி.மு.க.‌வினர் நிறுத்திக்கொள்ள வேண்டப்படுகிறார்கள். இது தலைமையின் கட்டளையாகக் கருதப்பட்டுப் பின்பற்றப்பட வேண்டும்.

நிகழ்ச்சி நடப்பதற்கு 3 நாட்கள் முன்பும், நடந்த பிறகு இரண்டு நாட்கள் வரையிலும் தான் அதற்கான விளம்பரங்களை, சுவரொட்டிகளை, படங்களை காவல்துறையினர் அனுமதிக்க வேண்டும் என்றும் 29.8.2007-ல் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதையும், காவல்துறையினரும், கட்சிகளின் நிர்வாகிகளும் கண்டிப்பாகக் கருதிச் செயல்பட வேண்டும்.

பெங்களூர், டெல்லி போன்ற மாநகரங்களில் சாலைகளில் பிரமாண்ட கட்-அவுட்கள் அகற்றப்பட்டது போலவே, சென்னையிலும் அகற்றப்பட உச்ச நீதிமன்றம் வரை முறையிட்டும் கூட உரிய பயன் கிட்டவில்லை. எனவே, மாநகரின் அழகு கெடாத வகையில் அந்தப் பிரமாண்ட கட்-அவுட்கள், போர்டுகள், போஸ்டர்கள் தொழிலில் ஈடுபடுவோர் அரசுடன் ஒத்துழைத்திட வேண்டும்.

கடுமையான சட்டம் இன்றியும், காவல் துறை நடவடிக்கை தேவைப்படாமலுமே சென்னையின் அழகு மிளிர அனைவரும் ஒத்துழைப்பது நல்லது என்பதையும் முடிவாக அறிவுறுத்திட வேண்டியவனாக இருக்கிறேன் எ‌ன்று முத‌ல்வ‌ர் கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்