3-வது காவல் ஆணையத்தின் பரிந்துரைகள் : நடைமுறைப்படுத்த உயர்மட்டக் குழு அமைப்பு!
வியாழன், 14 பிப்ரவரி 2008 (20:23 IST)
தமிழகத்தில் மூன்றாவது காவல் ஆணையத்தின் 444 பரிந்துரைகளில் ஒன்றின் அடிப்படையில், பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்க உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மூன்றாவது காவல் துறை ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்க உள்துறைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இக்குழுவில் நிதித்துறைச் செயலாளர் அல்லது அவருடைய பிரதிநிதி, மாநில காவல் துறை இயக்குநர் பி.இராஜேந்திரன், காவல்துறை (பயிற்சி) கூடுதல் காவல் துறை இயக்குநர் கே.இராமானுஜம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மூன்றாவது காவல் துறை ஆணையம் 444 பரிந்துரைகள் அடங்கிய தனது அறிக்கையை நேற்று முதல்வர் கருணாநிதியிடம் சமர்ப்பித்தது. இந்த ஆணையத்தின் தலைவர் ஒய்வு பெற்ற ஆட்சிப் பணிகள் துறை அதிகாரி ஆர். பூர்ணலிங்கம் நேற்று சமர்ப்பித்த 444 பரிந்துரைகளில் உயர்மட்ட குழு அமைப்பதும் ஒன்று. மூன்றாவது காவல் துறை ஆணையம் கடந்த 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் காவல் துறையை நவீனப்படுத்துவது, காவல் துறையை மேம்படுத்துவத மற்றும் மக்களுக்கு கடமையாற்றும் வகையில் காவல் துறையை எப்படி சீரமைப்பது என்பது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆணையம் முதல்வராக கருணாநிதி இருந்தபோது அமைக்கப்பட்டது.
அதேப்போல முன்பு கருணாநிதி முதல்வராக இருந்த போது 1969,1989 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட காவல் ஆணையத்தின் பரிந்துரைகளையும் தற்போது அமைக்கப்பட்ட மூன்றாவது ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டு தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது.