அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (15:37 IST)
நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அ.இ.அ.தி.மு.க. -வின் பொதுக்குழு சென்னையில் நாளை கூடுகிறது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளித்து வரும் இடதுசாரிகள் காங்கிரஸ், பா.ஜ.க. வுக்கு மாற்றாக ஒத்த கருத்துக்களைக் கொண்ட மாநிலக் கட்சிகளுடன் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அக்கட்சிகளின் தலைவர்கள் மாநிலம் மாநிலமாக சென்று கட்சியின் நிர்வாகிகளை தயார் படுத்த தொடங்கியுள்ளனர்.
இது போன்று பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடைபெற்றாலும் அதனை சந்திக்கும் வகையில் தங்களது கட்சியினரை தயார்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் அ.இ.அ.தி.மு.க. வினரை தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது, தேர்தலின் போது மக்கள் முன் வைக்கவேண்டிய பிரச்சனைகள் உள்ளிட்டவைத் தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிய விரும்பவுதாக கூறப்படுகிறது.
அ.இ.அ.தி.மு.க. வின் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க 3,200 பொதுக் குழு உறுப்பினர்களுக்கு தனித் தனியாக அழைப்பிதல் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி அரண்மனை திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இந்த பொதுக் குழுக் கூட்டத்துக்கு அக்கட்சியின் அவைத் தலைவர் கி.மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கட்சியில் மீண்டும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பொதுக் குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் தவிர வேறு சிலருக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மூன்று மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் நடைப்பெற உள்ள இந்த பொதுக் குழுக் கூட்டத்திற்கு வருகை தரும் ஜெயலலிதாவை வரவேற்க அ.இஅ.தி.மு.க. வினர் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
களகளனகளகன