தலைநகர் டெல்லியில் நாளை (திங்கள்கிழமை) நடக்கவுள்ள மத்திய திட்டக்குழு கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவர் இன்று மதியம் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்வதாக இருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் கருணாநிதியின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களாக அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கூறியதைத் தொடர்ந்து டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
முதலமைச்சர் கருணாநிதிக்குப் பதில் அமைச்சர் அன்பழகன் தலைமையிலான அதிகாரிகள் குழு டெல்லி செல்கிறது. அவர்கள் திட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.