முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹேமச்சந்திரன் மரணம்!
சனி, 9 பிப்ரவரி 2008 (12:20 IST)
திருவட்டார் தொகுதி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஹேமச்சந்திரன் புற்று நோயால் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் தொகுதி முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஹேமச்சந்திரன். இவருக்கு வயது 77. தமிழக சட்டமன்றத்துக்கு 4 முறை தேர்ந்து எடுக்கப்பட்டவர். ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர், முதுகு தண்டில் கட்டி வந்து அவதிப்பட்டார். இதனால் அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அது புற்று நோய் கட்டி என்பது தெரிய வந்தது. அதற்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.
அவரது உடல் நேற்று இரவே நாகர்கோவில் கொண்டுவரப்பட்டது. அவரது உடல் இன்று காலை முதல் பிற்பகல் 2 மணி வரை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் குலசேகரம் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் மாலை 5 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பிறகு திருவட்டார் அருகே உள்ள மாத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.
ஹேமச்சந்திரன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொடிகள் 3 நாள் அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் வரதராஜன் கூறியுள்ளார்.