தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, செங்கல்பட்டு, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் இயங்கி வருகின்றன. புதிதாக தொடங்கப்பட்ட கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் திருச்சி கல்லூரி நீங்கலாக மற்ற அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் எம்.டி., எம்.எஸ். முதுநிலை மருத்துவ படிப்புகள் வழங்கப்படுகின்றன.
எம்.டி. படிப்புக்கு 161 இடங்களும், எம்.எஸ். படிப்புக்கு 325 இடங்களும், எம்.டி.எஸ். படிப்புக்கு 33 இடங்களும், டிப்ளமோ படிப்புகளுக்கு 428 இடங்களும் உள்ளன. நுழைவுத்தேர்வு அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெறும். இந்த நுழைவுத்தேர்வு பிப்ரவரி 24ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
எம்.டி., எம்.எஸ். படிப்புகளில் சேர 6 ஆயிரம் மருத்துவர்களும், எம்.டி.எஸ். படிப்பில் சேர 500 பல் மருத்துவர்களும் விண்ணப்பித்து உள்ளனர். நுழைவுத்தேர்வு முடிவு ஒரு வாரத்திற்குள் வெளியிடப்பட்டு மே 31ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்படும் என்று மருத்துவ தேர்வுக்குழுவின் செயலாளரும் மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனருமான (பொறுப்பு) டாக்டர் மோகனசுந்தரம் தெரிவித்தார்.