தமிழக‌ம் முழுவதும் மா‌ர்‌ச் 5ஆ‌ம் தே‌தி புகைப்படத்துடன் இறுதி வாக்காளர் பட்டியல்: நரேஷ்குப்தா!

சனி, 9 பிப்ரவரி 2008 (09:40 IST)
''தமிழக‌ம் முழுவதும் மா‌ர்‌ச் 5ஆ‌ம் தே‌தி புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்'' என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் கூறுகை‌யி‌ல், தேர்தல் ஆணைய‌ம் வாக்காளர் விவர பட்டியலை ஆராய்வதற்காக ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளது. இதில் வாக்காளர் பட்டியலில் உள்ள ஆண், பெண் விவரங்கள், வயது விகிதாச்சார அடிப்படையிலான விவரங்கள் அனைத்தும் தனித்தனியாக தொகுக்கப்படும். இந்த தொகுப்புகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை கூட்டினால் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையுடன் பொருந்தி வர வேண்டும்.

எதிர்காலத்தில் அனைத்து தொகுதி தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் இந்த வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து சரியானது தான் என்று சான்றளிக்க வேண்டும். அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த பணிகளை மேற்பார்வையிட மண்டல வாரியாக ஒரு தேர்தல் மேலிட பார்வையாளர் நியமிக்கப்படுவார்.

தமிழ்நாட்டில் ஜனவரி 1ஆ‌ம் தேதியை அடிப்படையாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 98 ‌விழு‌க்காடு முடிவடைந்து விட்டது. தமிழகம் முழுவதும் மார்ச் 5ஆ‌ம் தேதி புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இணையதளத்தில் வெளியிடப்படும் பட்டியலில் புகைப்படம் இடம்பெறாது. தொகுதி சீரமைப்பு அறிவிக்கப்பட்டு விட்டால் புதிய தொகுதிகளுக்கேற்ப வாக்காளர் பட்டியல் தயாரிக்க எங்களுக்கு 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை ஆகும் எ‌ன்று நரே‌ஷ்கு‌ப்தா கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்