ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதியில் விவசாய பாசன நிலங்கள், ஆலைகள், வீடுகளை அகற்றிவிட்டு காங்கேயம் நகர்ப்பகுதியில் புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, காங்கேயத்தில் பொதுமக்கள் பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டனர். இதில், பெண்கள் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், காங்கேயம் நகரத்துக்கு தேசிய புறவழிச்சாலை திட்டத்தால் எவ்வித பயனும் இல்லை என்றும் இந்த திட்டத்தை வலுக்கட்டாயமாக திணித்து அடிப்படை வாழ்வுரிமைகளை பறிப்பதை கண்டித்து, நேற்று காங்கேயம் பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்த பொதுமக்கள் ஒன்றுகூடினர்.
கோவை-கரூர் புறவழிச்சாலை பாதிக்கப்பட்டோர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி மற்றும் பொதுமக்கள் பேருந்து நிலையம் முன்பு அமர்ந்தனர். நெடுஞ்சாலைத் துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.