''காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று இரவு நாடு முழுவதும் மிருகங்களும் கண்டு வெட்கப்படக் கூடிய அநாகரீக வக்கிரங்கள் நடைபெற்றன. லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட வியாபாரிகளின் கூட்டு முயற்சி காரணமாகவே இந்த கலாச்சார அழிப்பு நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன.
சென்னையில் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நீச்சல் குளத்தின் மீது மேடை அமைத்து இளைஞர்கள் குடித்து விட்டு ஆடியதில் மேடை சரிந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதுபோன்ற அநாகரீகமான கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் காட்டுமிராண்டித்தனத்தை பா.ம.க. தலைவர் ராமதாஸ் தவிர வேறு யாரும் கண்டிக்கவில்லை. பாரதத்தின் தனிச்சிறப்பான பண்புகள் அழிக்கப்படுவதை ஏற்று கொள்ள முடியாது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சுதந்திரம் கொடுப்பதாக கூறி கொண்டு அவர்கள் வரம்பு மீறுவதை அனுமதிக்கக் கூடாது. காதலர் தினத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும். புத்தாண்டை போல் காதலர் தின கொண்டாட்டங்கள் நடைபெறுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமகோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.