ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி: உயர் நீதிமன்றம்!
திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:42 IST)
தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 2006-07க்கான ஆண்டுத் தேர்வை எழுத அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் மாணவர்களின் வருகை பதிவேடு குறைவாக இருப்பதாகவும், அங்கீகாரம் இன்றி பல பள்ளிகள் இயங்கி வருவதாகவும் கூறி அவற்றிற்கு தடை விதிக்கப் போவதாக கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதனை எதிர்த்து அகில இந்திய தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் சங்க தலைவர் பி.டி.குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி, மாணவர்கள் 2006-07 ஆண்டுக்கான தேர்வு எழுத அனுமதிக்கும்படி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இவ்வழக்கு நீதிபதிகள் முகோபாத்யாயா, வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் சார்பில் வழக்கறிஞர்கள் கே.எம்.விஜயன், செல்வராஜ் ஆகியோர் வாதிடுகையில், அரசு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்காததால் 5 ஆயிரம் பேரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதைத் கேட்ட நீதிபதிகள், தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 2006-07ஆம் ஆண்டு தேர்வு எழுத தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.