ஹூண்டாய் ஊழியர்கள் 100 பேர் கைது!
சனி, 2 பிப்ரவரி 2008 (13:11 IST)
தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை மனு அளிப்பதற்காக காத்திருந்த 100 ஹூண்டாய் மோட்டார் நிறுவன ஊழியர்களை காவல் துறையினர் அனுமதியின்றி கூடியதற்காக கைது செய்துள்ளனர்.
இந்த கைது மூலம் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் செளவுந்திர ராஜன் குற்றச்சாட்டியுள்ளார்.
திருப்பெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் அமைந்துள்ள ஹூண்டாய் கார் உற்பத்தி நிறுவனத்தின் இரண்டாவது உற்பத்தி பிரிவு தொடக்க விழா இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைப்பெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்காததைத் தொடர்ந்து, ஊழியர்கள் 100 பேர் பூவிருந்தவல்லி அருகே உள்ள குமணன் சாவடி அருகே முதல்வரை வரவேற்கும் விதமாக இன்று காலை காத்திருந்தனர்.
தொழிலாளர்கள் உரிய அனுமதியைப் பெறவில்லை என்று கூறி காவல் துறையினர் அவர்களை கைது செய்ததுடன், தங்களிக் கோரிக்கை மனுவை தொழிலாளர்கள் முதல்வரிடம் வழங்க விடாமல் தடுத்துள்ளதாகவும் செளவுந்திர ராஜன் குற்றஞ் சாற்றியுள்ளார். காவல் துறையினர் தொழிலாளர்களை கைது செய்து நடந்து கொண்ட விதம் கடுமையான கண்டனத்துக்குஉரியது என்றும், இப்பிரச்சனையில் முதல்வர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் 500 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை காவல் துறையினரும், ஹூண்டாய் நிர்வாகமும் முரட்டுத்தனமாக மறுத்துள்ளதாகவும் சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் செளவுந்திர ராஜன் குற்றச்சாட்டியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைப்பெறாத வண்ணம் முதல்வர் இப்பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.