5 ஆண்டுகளில் பிரமோஸ்-2 ஏவுகணை தயார் : விஞ்ஞானி சிவதாணு பிள்ளை!
செவ்வாய், 29 ஜனவரி 2008 (10:18 IST)
''ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகம் கொண்ட பிரமோஸ்-2 ஏவுகணையை இன்னும் 5 ஆண்டுகளில் தயாரித்து விடுவோம்'' என்று இந்திய ஏவுகணை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கூறினார்.
சென்னை கிண்டி பிர்லா கோளரங்க வளாகத்தில் 3 நாட்கள் நடைபெறும் அறிவியல் கண்காட்சியை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) தலைமை கட்டுப்பாட்டு அதிகாரியும் பிரமோஸ் ஏவுகணை திட்டத்தின் நிர்வாக இயக்குனருமான விஞ்ஞானி சிவதாணு பிள்ளை துவக்கி வைத்தார்.
பின்னர் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உலகிலேயே அதிக வேகம் கொண்ட பிரமோஸ் ஏவுகணை இந்தியாவிடம்தான் உள்ளது. ஒலியின் வேகத்தை 2.8 மடங்கு வேகம் கொண்டது இந்த ஏவுகணை. இவ்வளவு வேகம் கொண்ட ஏவுகணையை தயாரிப்பதற்கு உலக நாடுகள் எவ்வளவோ முயற்சிகள் செய்துதான் பார்க்கின்றன. ஆனால் அவர்களால் முடியவில்லை.
நமது பிரமோஸ் ஏவுகணை 5 மீட்டர் உயரம் முதல் 15 கி.மீ. உயரம் வரை தேவைக்கேற்ப ஏவ முடியும். தற்போது இந்திய ராணுவத்திலும், கடற்படையிலும் இதை சேர்த்திருக்கிறோம். இந்த ஏவுகணை விரைவில் விமானம், நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்படும். அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. மேலும், 5.9 மாக் நம்பர் (மாக் ஒலியின் வேகத்தை குறிக்கும்) வேகம் கொண்ட பிரமோஸ்-2 ஏவுகணையை தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம். இதற்கான வடிவமைப்பு உள்ளிட்ட தொடக்கநிலைப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.
இன்னும் 5 ஆண்டுகளில் பிரமோஸ்-2 ஏவுகணையை தயாரித்து விடுவோம். எதிரி நாடுகள் நம்மை தாக்க நினைத்து பார்ப்பதற்குள் அவர்களின் ராணுவ நிலைகளை அழித்துவிடும் ஆற்றல் கொண்டதாக இந்த ஏவுகணை இருக்கும் என்று சிவதாணு பிள்ளை கூறினார்.