2001 சட்ட மன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு நிதியமைச்சராக பொன்னையன் பதவி வகித்தார். பின்னர் அ.இ.அ.தி.மு.க.வின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதையடுத்து, சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியின் ஆட்சிமன்றக் குழுவிலிருந்து பொன்னையன் நீக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அரசியலில் இருந்து பொன்னையன் ஒதுங்கியிருந்தார். தற்போது பொன்னையனுக்கு ஜெயலலிதா புதிய பொறுப்பு வழங்கியுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. வரலாற்றில் அரசியல் ஆலோசகர் என்ற புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் பொன்னையன் அப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க அரசியல் ஆலோசகர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கட்சித் தொண்டர்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.