மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் 3-வது நாளாக வேலை நிறுத்தம்!
ஞாயிறு, 27 ஜனவரி 2008 (13:51 IST)
இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்களை விடுவிக்க வேண்டும், கச்சத்தீவு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி தமிழக மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் 3 நாட்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 2500 விசைப்படகுகளும், 1500 நாட்டுபடகுகளும் உள்ளன. தினந்தோறும் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்று வருகின்றன. இதனால் எப்போதுமே களைகட்டி இருக்கும் ராமேசுவரம் கடற்கரை. இந்நிலையில் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்களை விடுவிக்க வேண்டும், கச்சத்தீவு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி தமிழக மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும், இலங்கை கடற்படை கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக காலவரையற்ற போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து ராமேஸ்வரம் வருவாய்துறை அதிகாரி நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. படகுகள் கடற்கரையில் ஓய்வு எடுத்த வண்ணம் இருக்கின்றன.
மீன்பிடி நாட்களில் ஒரு படகுக்கு தலா 20 கிலோ இறால் மீன்கள் கிடைக்கும். அதிக அளவில் இறால்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்காக ராமேசுவரத்தில் 5-க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறன்றன. கடந்த 3 நாட்களாக மீன்கள் வரத்து இல்லாததால் ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக ரூ.3 கோடிக்கும் மேல் அன்னிய செலாவணி இழப்பு ஏற்பட்டு உள்ளது. படகுகள் வேலைநிறுத்தத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை களை இழந்து காணப்படுகிறது.