சாலை ஓரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த தாயும், 2 குழந்தைகள் மீது மணல் லாரி ஏறி இறங்கியது. இதில் 3 பேர் பலியாயினர்.
திருவேற்காடு உள்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (35). கழைக்கூத்தாடியான இவருடைய மனைவி பெயர் கங்கா (25). இவர்களுக்கு 4 வயதில் மாரியப்பன் என்ற மகனும், 8 மாத கைக்குழந்தையான கவிதா என்ற மகளும் இருந்தனர்.
நேற்று மேடவாக்கம் பகுதியில் ஐயப்பன் வித்தை காட்டி பிழைப்பு நடத்திவிட்டு, கூட்டு ரோடு பேருந்து நிலையம் அருகே சாலை ஓரத்தில் குடும்பத்தினருடன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். பக்கத்தில் ஐயப்பன் தூங்கிக் கொண்டிருந்தார். அவர்கள் அருகே மணல் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
இன்று அதிகாலை தள்ளி நிறுத்தி வைத்திருந்த மணல் ஏற்றிச் செல்லும் லாரியை டிரைவர் பின்னோக்கி எடுத்தார். கங்கா குழந்தைகளுடன் படுத்திருந்ததை அவர் கவனிக்கவில்லை. அவர்கள் 3 பேர் மீதும் லாரி ஏறியது. இதில், மாரியப்பனும், கவிதாவும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
படுகாயம் அடைந்த கங்கா சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.
இந்த விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பியோடிவிட்ட மணல் லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.