சட்டப் பேரவையில் இன்று முல்லை பெரியாறு, பாலாறு அணை பிரச்சனை குறித்து பொதுப் பணித் துறை அமைச்சருக்கும், அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் சேகர் பாபு பேசுகையில், கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்த தீர்ப்பு வாங்கி தந்தார். ஆனால் அதை நீங்கள் நிலை நாட்ட தவறி விட்டீர்கள். ஜெயலலிதா ஆட்சியில் பாலாற்றில் அணை கட்ட ஆந்திர அரசுக்கு தைரியம் வரவில்லை என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், உங்கள் ஆட்சிக் காலத்தில்தான் பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டும் திட்டமே ஆரம்பித்தது. அப்போது நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கு போட்டீர்கள், அதற்கு நம்பர் கூட வாங்கவில்லை. முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தீர்ப்பு உங்கள் காலத்தில் தான் வந்தது. தற்போது வழக்கு முடியவில்லை. நடந்து கொண்டு இருக்கிறது என்று கூறினார்.
பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து நாங்கள் தான் வழக்கு தொடர்ந்தோம். முல்லை பெரியாறு பிரச்சினையில் கூட 27-2-06ல் தீர்ப்பு வந்தது. ஆனால் 1-3-06ல் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்ததால் அதை செயலாக்க முடியவில்லை. 136 அடிக்கு மேல் நீர் நிரம்பியும் வீணாக கடலில் தான் கலந்தது. தொடர்ந்து மத்திய அரசில் 9 ஆண்டுகளாக ஆட்சியில் நீங்கள் தான் இருக்கிறீர்கள். 142 அடி வரை கேட்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்கையில், இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் அரசு வாதாடி வருகிறது. இதற்கிடையே கேரள அரசு ஒரு திருத்தத்தை கொண்டு வந்து எந்தெந்த அணை கேரள அரசுக்கு சொந்தம் என்று பட்டியலிட்டு அதில் முல்லை பெரியாறு அணையையும் சேர்ந்து விட்டனர். 136 அடி வரை தண்ணீர் தேக்க சட்டம் போட்டு விட்டனர். இதுவும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தான் நடந்துள்ளது. இந்த சட்டத்தை உடைக்க நீதிமன்றத்தில் நாம் வாதாடி வருகிறோம் என்றார்.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நீங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பினார்.
அப்போது அவைத் தலைவர் ஆவுடையப்பன் குறுக்கிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்று அமைச்சர் கூறுகிறார். எனவே வேறு பிரச்சினை பற்றி பேசுங்கள் என்று விவாதத்திற்கு முற்றுபுள்ளி வைத்தார்.