தனியார் துறை மூலம் 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முதல்வர் கருணாநிதி அனுமதி அளித்திருப்பதாக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஏ.எஸ்.எஸ்.ராமன் (காங்.), டி.ஜெயக்குமார் (அ.இ.அ.தி.மு.க), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்யூ.), செந்தமிழ்ச் செல்வம் (பா.ம.க), சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதாவது:
தமிழகத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய மரபுசாரா எரி சக்திகளான காற்றாலை, சூரிய ஒளி, கரும்பு சக்கை மற்றும் தாவரக் கழிவுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறோம். தற்போது காற்றாலை மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் 1500 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டதால்தான் இங்கே தட்டுப்பாடு ஏற்பட்டது.
மத்திய தொகுப்பிலிருந்து 350 மெகாவாட், என்.எல்.சி.யிலிருந்து முழுமையான மின்சாரம் கிடைத்தால் மின்தடையின்றி பார்த்துக் கொள்ள முடியும். தனியார் மூலம் மின் உற்பத்தி செய்தால் அவர்களிடமிருந்து ஒரு யூனிட் ரூ.2.50 என்ற விலையில் மின்சாரம் பெற ஒப்பந்தம் செய்துள்ளோம்.
தனியார் மூலம் மின்சாரத்தை மாநிலங்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டதின் அடிப்படையில் முதல்வர் கருணாநிதி, தனியார் துறை மூலம் 18 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கு அனுமதி தந்துள்ளார். இதில் முதலீடு செய்ய தனியார் தயாராக உள்ளனர். அதன்படி இப்படியொரு தனி மையம் அமைத்தால் பெங்களூரில் உள்ள தென்னக விநியோக அமைப்புடன் அதனை இணைக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் பணியில் என்.எல்.சி.யும், தமிழக மின் வாரியமும் இணைந்து செயல்படுகிறது. காவிரி டெல்டா பகுதியில் கூடுதல் எரிவாயு எடுத்து அதன் மூலம் மின் உற்பத்தி செய்ய பெட்ரோலியத் துறையை வலியுறுத்தி உள்ளோம். தாவரக் கழிவுகள் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் பணிகளை "டெடா' என்ற நிறுவனம் செய்து வருகிறது. மொத்தம் 13 இடங்களில் இயற்கை தாவரங்கள் மூலம் 139 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்கிறார்கள்.
அனைத்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கோ ஜெனரேஷன் மூலம் ரூ.900 கோடி செலவில் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மின் உற்பத்தி துவங்கும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.