மீனவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி கேட்டு முதல்வர் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தார். உடனடியாக, அது பற்றி தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி உள்பட முக்கிய அதிகாரிகளுடன் விவாதித்தார்.
இதைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை மீட்க, உடனடி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அதிகாரிகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார். இதன்பிறகு, இலங்கையில் உள்ள இந்திய துணைத்தூதரை தமிழக அதிகாரிகள் தொடர்பு கொண்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரையும் தமிழக அதிகாரிகள் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, முதலமைச்சர் தரப்பில் இருந்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.