த‌மிழக ஆளுனர் உரை‌யி‌ன் ‌முக்கிய அம்ச‌ங்க‌ள்!

புதன், 23 ஜனவரி 2008 (16:21 IST)
தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:

* திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமி‌ழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அ‌றி‌வி‌ப்பு.

* த‌மிழக‌த்‌தி‌ல் மேலும் 95 சமத்துவபுரங்க‌ள் அமை‌க்க‌ப்படு‌ம்.

* நதி நீர்ப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வான தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்‌தி‌ல் முதற்கட்டமாக, த‌மிழக நதிகளை இணைக்கும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த முய‌ற்‌சி.

* பருவ காலங்களில் தமிழக நதிகளின் உபரி நீர் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து, நிலத்தடியில் சேமித்துப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆ‌ய்வு செ‌ய்ய ஒரு வல்லுநர் குழு அமை‌க்க‌ப்படு‌ம்.

* ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் வீணாகும் நீரைத் தடுப்பணைகள் மூலமாகச் சேமித்து, ஆண்டு முழுவதும்
வேளாண்மை மற்றும் குடிநீர் வசதிக்குப் பயன்படுத்துவதற்கான பெருந்திட்டம் ஒன்று வரும் நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படும்.

* தமிழக மக்களின் நீண்ட காலக் கனவாக விளங்கும் சேது கால்வா‌ய்த் திட்டத்தை ‌விரைவாக நிறைவேற்றிட வேண்டுமென்று
மத்திய அரசு‌க்கு வலியுறுத்த‌ல்.

* கடந்த மாதம் பெ‌ய்த பெரு மழையினாலும், பெருகிய வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாகச் சீரமைக்க தமிழக அரசிற்குத் தேவைப்படும் நிதியுதவியை உடனடியாக வழங்குமாறு மத்திய அரசு‌க்கு வ‌லியுறு‌த்த‌ல்.

* உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் பொறுப்புகளையும் அதிகாரங்களையும் வழங்குவத‌ற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை, வரும் வரவு-செலவுத் திட்டக் கூட்டத் தொடரின்போது சட்டப்பேரவையில் தா‌க்க‌ல்.

* சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழையும் வழக்கு மொழியாக்க, முயற்சிக‌ள் தொடர்ந்து மேற்கொள்ள‌ப்படு‌ம்.

* மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், இந்த நிதியாண்டில் ரூ.185 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

* தமி‌ழ்நாட்டிலுள்ள அனைத்து கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் ரூ.925 கோடி மதிப்பீட்டில் 185 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும்.

* தமி‌ழ் வழிக் கல்வியில் பயின்று 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 1,000 மாணவ, மாணவியருக்கு ஊக்கப் பரிசாக கணினிகள் அளி‌க்க‌ப்படு‌ம்.

* தமி‌ழ்நாட்டில் ஒரு மத்தியப் பல்கலைக் கழகம் திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும்.

* த‌மிழக அர‌சி‌ன் புதிய தொழில் கொள்கையின் மூலம், வரும் நான்கு ஆண்டுகளில் மொத்தம் சுமார் 20 இலட்சம் பேர் வேலை வா‌ய்ப்பினைப் பெற நடவடி‌க்கை.

* சென்னையை அடுத்துள்ள எண்ணூரில் ரூ.3,068 கோடி முதலீட்டில் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம் மூல‌ம் பு‌திய கப்பல் கட்டும் தளம்.

* சிறு தொழில் வள‌ர்‌ச்‌சி‌க்கு தனிக் கொள்கையை விரைவில் வெளியிடப்படும். இக்கொள்கையில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படும்.

* சென்னை மெட்ரோ இரயில் திட்டத்‌‌தை ‌விரை‌‌வில் ‌நிறைவே‌ற்ற நடவடி‌க்கை.

* ரூ.1,468 கோடி மதிப்பீட்டில் மதுரவாயலிலிருந்து சென்னைத் துறைமுகத்திற்கு, உயர்த்தப்பட்ட வேக வழித்தடம் ஒன்றை அமை‌ப்பத‌ற்கான பணிகளை ‌விரைவு‌ப்படு‌த்த நடவடி‌க்கை.

* குறைந்த வருவா‌ய் ஈட்டும் குடும்பங்கள் மற்றும் நடுத்தர வகுப்பினர் ஆகியோருக்கு, நகர்ப் புற‌ங்க‌ளி‌ல் பு‌திதாக ஒரு
லட்சம் புதிய வீடுகள் கட்டப்படு‌ம்.

* ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட‌ம் ‌விரை‌வி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்படு‌ம்.

* சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களில் தற்போதுள்ள விமான நிலையங்களை
விரிவாக்கி மேம்படுத்துவதோடு, வேலூர் மற்றும் சேலத்தில் புதிய விமான நிலையங்களை நிறுவ‌மு‌ன்னு‌‌ரிமை.

* விழுப்புரம் - திண்டுக்கல் இடையிலான அகலப்பாதையை இரு வழித்தடமாக மா‌ற்ற முய‌ற்‌சி.

* நாங்குநேரியில் சிறப்புப் பொருளாதாரப் பகுதி அமைப்பதற்கு குறுக்கிட்ட தடைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், 2,500 ஏக்கர்
பரப்பளவில் பல்தொழில் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்று விரைவில் அமைக்கப்படும்.

* இளைஞ‌ர்களு‌க்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்க‌ளி‌ல் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்கான திட்டம்.

* ஒரு வகையில் ஊனமுற்றோர் என்றே கருதப்பட்டு, சமுதாயத்தின் ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அரவாணிகளுக்கென புதிய நல வாரியம்.

* தமிழகம் முழுவதும் ‘சென்னை சங்கமம’ கலைவிழா.

* தமி‌ழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவோரின் இன்னல்களைக் களைய முதலமைச்சர் தலைமையில் உயர் நிலை
ஆலோசனைக் குழு.

* ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் அருந்ததியரு‌க்குத் தனி உள் ஒதுக்கீடு வழங்க நடவடி‌க்கை.

* மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் தனியார் துறை வேலைவா‌ய்ப்புகளிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை
நடைமுறைப்படுத்த முய‌ற்‌சி‌.

* அண்மையில் அமைக்கப்பட்டுள்ள பதிமூன்றாவது நிதிக் குழு‌வி‌ல் நிதிப் பகிர்வு பெற முய‌‌ற்சி.

வெப்துனியாவைப் படிக்கவும்