சட்ட‌ப் பேரவை‌யி‌ன் நடவடிக்கையை ‌‌நீ‌திம‌ன்ற‌ உத்தரவு கட்டுப்படுத்தாது: சபாநாயகர்!

புதன், 23 ஜனவரி 2008 (10:05 IST)
'நீதிமன்ற உத்தரவு சட்ட‌ப் பேரவை நடவடிக்கையை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது' என்றும் சபாநாயகர் ஆவுடையப்பன் கூறினார்.

சட்ட‌ப் பேரவை கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் ஆவுடையப்பன் சென்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ன் 7-வது கூட்டத்தொடர் நாளை (இ‌ன்று) காலை 10 மணிக்கு ஆளுன‌ர் உரையுடன் துவங்குகிறது. 24ஆ‌ம் தேதி காலை 9.30 மணிக்கு சபை மீண்டும் கூடுகிறது. அப்போது, மறைந்த முன்னாள் ச‌ட்ட‌ப் பேரவை உறு‌ப்‌பின‌ர்க‌ள் தனுஷ்கோடி தேவர், கே.வேலுச்சாமி, டி.கே.கபாலி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்படும்.

வழக்கமாக ஆளுன‌ர் உரையுடன் துவங்கும் சட்ட‌ப் பேரவை கூட்டத்தொடர் 6 அல்லது 7 நாட்கள் நடைபெறும். இந்த கூட்டத்தொடரில் மேற்கொள்ள உள்ள நிகழ்ச்சிகள் குறித்தும், எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதும், எந்தெந்த நாட்களில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்தும், ஆளுன‌ர் உரையை தொடர்ந்து எனது அறையில் நடைபெற உள்ள சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்த கூட்டத்தொடரில் திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டிருப்பது உள்பட 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் சஸ்பெண்டு நடவடிக்கை‌யி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் இருந்து தா‌க்‌கீது அனுப்ப முடியாது. நீதிமன்ற உத்தரவு சபை நடவடிக்கையை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது, ஜெயலலிதா மீதான உரிமைப்பிரச்சினை குறித்த சம்மன் தொடர்பாக உரிமைக்குழுதான் முடிவு செய்யும் என்று சபாநாயகர் ஆவுடையப்பன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்