தமிழகத்தில் 5 ஆண்டில் 91 பள்ளி குழந்தைகள் தற்கொலை!
திங்கள், 21 ஜனவரி 2008 (17:33 IST)
தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 91 பள்ளி குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் வசந்தி தேவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பள்ளி குழந்தைகள் அதிகமாக தற்கொலை செய்வதற்கு காரணம் மன அழுத்தம், கடுமையான பாடத்திட்டம், கட்டாய நன்கொடை, மாதாந்திர கட்டணங்கள் உள்ளிட்ட பிற கட்டணங்கள் என்று அவர் தெரிவித்தார்.
உடல் அளவிலும், மனதளவிலும் துன்புறுத்துதல், பாலியல் தொந்தரவு ஆகியவற்றால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 39 குழந்தைகள் தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.
பள்ளிகளிலும், விடுதிகளிலும் தற்கொலை செய்துள்ள மாணவிகள் சாதாரணமாக இறந்துள்ளதாக பள்ளி நிர்வாகம் மறைப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் 250 குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.
குழந்தைகள் உரிமையை பாதுகாக்கும் தேசிய ஆணையத்தின் கருத்து கேட்பு முகாம் சென்னையில் உள்ள உலக பல்கலைக்கழக மையத்தில் ஜனவரி 23ஆம் தேதி நடக்கிறது. இதில் பள்ளி, விடுதிகளில் பல்வேறு சித்திரவதைகள், பாலியல் கொடுமைகள், பள்ளி விடுதிகளில் குழந்தைகள் புறக்கணிக்கப்படுவது குறித்த பிரச்சனைகள் தொடர்பான புகார் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது குறித்து இந்த முகாமில் பொது மக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
தேசிய குழந்தைகள் ஆணையத்தின் முன்பு குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாக வந்துள்ள 40 வழக்குகளில் 33 பள்ளி மற்றும் 7 விடுதிகள் அடங்கும். இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 40 குழந்தைகளில் 15 பேர் மாணவிகள், 25 பேர் மாணவர்கள் என்று வசந்தி தேவி கூறினார்.