2,500 கிராம அதிகாரிகளுக்கு நியமன ஆணை: கருணாநிதி வழங்கினார்!
திங்கள், 21 ஜனவரி 2008 (16:21 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட 2,500 கிராம அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 2006 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் 2006-07ல் 76 ஆயிரத்து 622 ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ஜூலை 30ஆம் தேதி வரை 58 ஆயிரம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், 2007-08 ஆம் ஆண்டில் 3 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து 2 லட்சத்து 42 ஆயிரம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு, இந்த ஆண்டில் 3 லட்சம் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப் படும் என்ற இலக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கு முன்னதாகவே இலக்கை விஞ்சி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதன் அடையாளமாக இன்று தலைமைச் செயலகத்தில் 3 லட்சத்து ஒன்றாவது இலவச வீட்டுமனைப் பட்டாவை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
இதேபோல், பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு, 2 ஆயிரத்து 500 கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் பணிகளை முதலமைச்சர் கருணாநிதி துவங்கி வைத்தார் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.