தமிழ்நாட்டில் 30 ஊரக மாவட்டங்களில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களையும் அடிப்படையாக கொண்டு அவற்றில் உள்ள நீராதாரங்களின் தன்மை மற்றும் நீர் வழங்கும் திறன், நில மேற்பரப்பின் அமைப்பு, நிலத்தடி நீர்வளம் மற்றும் நீராதாரத்தை மேம்படுத்தத் திட்டங்களை தயாரித்தல், தேவையான கட்டமைப்புகளை அமைக்க ஏற்ற பகுதிகள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய வரைப்படங்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தயாரித்துள்ளது.
இப்பணிக்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு மாநில திட்ட குழுவின் கீழ் இயங்கி வருகின்ற தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு வாரியம் ரூ.11 லட்சம் வழங்கியுள்ளது.
மாநிலத்தில் உள்ள நீர் வளங்களின் நீடித்த நிலைத்த தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன், ஒன்றிய அளவிலான வரைப்படங்களை தற்போதுள்ள நிலவரத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதை இலக்காக கொண்டு இப்பணி நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இக்குறுந்தகட்டில் ஊராட்சி ஒன்றிய வாரியாக அதிக அளவில் நீரினை பயன்படுத்தும் ஒன்றியங்கள் கடின வகை பகுதிகள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்டங்களில் நீராதார மேம்பாட்டு பணிகளான தடுப்பணைகள், கசிவு நீர் குட்டைகள், நீர் உறிஞ்சி குழிகள் ஆகியவற்றை அமைப்பதற்கு ஏற்ற பகுதிகள் வரைப்படத்தில் குறிப்பாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன.
ஒன்றியம் தோறும் பல்வேறு திட்டங்களின் கீழ் செயல்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும் புதிய நீராதார அமைப்பு பணிகள் மற்றும் நிலத்தடி நீராதாரம், நில நீர் வளத்தின் நீடித்த நிலைத்த தன்மையை மேம்படுத்த அமைக்கப்பட வேண்டிய நீர் செறிவூட்டு கட்டமைப்புகளை அமைக்க வேண்டிய பகுதிகளை நிர்ணயித்திட இக்குறுந்தகடு மிகவும் பயன்படும்.
மேலும் நிலத்தடி நீர் மதிப்பீட்டு குழுமத்தின் ஆய்வின்படி நீர் பயன்பாட்டு விகிதாசாரம் ஒன்றிய வாரியாக இதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட விபரங்கள், வரைப்படங்களுடன் ஊராட்சி ஒன்றிய வாரியாக உருவாக்கப்பட்டுள்ள குறுந்தகடுகளை இன்று அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் மு.நாகநாதன் முன்னிலையில் வெளியிட்டார். இதனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சத்யபிரதா சாகு பெற்றுக் கொண்டார்.
விழாவில் மாநில திட்டக் குழுவின் உறுப்பினர் செயலர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு செயலர் க.தீனபந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்வரன்சிங், மற்றும் வாரிய உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.