சாதனை படைத்த தொழில் நிறுவன அதிபர்களுக்கு விருது, தொழில் சங்கமம் துவக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்தது. முதலமைச்சர் கருணாநிதி, சாதனை புரிந்த தொழில் அதிபர்களுக்கு விருது வழங்கி பேசுகையில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டில் சித்த மருத்துவம் உருவானது. சித்தர்கள் மூலிகை மருந்துகளை கண்டு பிடித்தனர். அந்த மருந்துகள் 21-ம் நூற்றாண்டு நடந்து வரும் இன்றைய காலகட்டத்திலும் பயன்படுகின்றன.
தமிழக அரசு 10 ஆண்டுகளுக்கு முன்பே `டைடல்' பூங்கா அமைத்து கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. அதன் மூலம் பள்ளிகளிலும், தொழில் துறைகளிலும், கிராமங்களிலும் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழக அரசு வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்குவதன் மூலம் இளைஞர்கள் தங்கள் சிந்தனைகளை வளர்த்து உயர அது பயன்படுகிறது.
தி.மு.க. அரசு பதவிக்கு வந்த பிறகு 11 நிறுவனங்களுடன் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு 11 ஆயிரத்து 83 கோடி முதலீடு வந்துள்ளது. 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் தான் தொழில் தொடங்குவதற்கான நல்ல சூழ்நிலை உள்ளது.
சமீபத்தில் தமிழக அரசு புதிய தொழில் கொள்கையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2011ஆம் ஆண்டிற்குள் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி அளவுக்கு பண முதலீடு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி உலக அளவில் உயர்ந்து வருகிறது.
சென்னை, ஓசூர், மதுரை, தூத்துக்குடி, கோவை ஆகிய நகரங்களை இணைக்கும் பாதையில் சிறந்த தொழில் பூங்காக்கள் அமையும். இதில் பாரம்பரிய தொழில்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.