தேனி அருகே ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்க்க வந்த 70 வயது முதியவர் ஒருவர் காளை குத்தி பரிதாபமாக இறந்தார்.
தேனி மாவட்டம், கோட்டூரில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் இந்த போட்டியை காண கூடியிருந்தனர். அவிழ்த்து விட்ட காளைகள் சீறிப் பாய்ந்து வந்தன. அவற்றை வாலிபர்கள் மடக்கி பிடித்தனர். சில காளைகள் அடக்கியவர்களை தூக்கி வீசியது.
இதில் சில காளைகள் மிரண்டு போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்துக்குள் திடீரென புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். காளைகள் முட்டித் தள்ளியதில் சிலர் கீழே விழுந்தனர். இதனால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
இதனிடையே ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்த முத்து ராவுத்தர் (70) என்பவரை கூட்டத்தில் சீறி பாய்ந்து வந்த காளை ஒன்று கொம்பால் குத்தி தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த முத்து ராவுத்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.