உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் வந்து இருந்தன. காளைகளை அடக்க வீரர்களும் மதுரை மட்டுமின்றி சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வந்து தங்கள் பெயரை பதிவு செய்தனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து வாலிபர்களும், காளையும் மருத்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனையை இந்திய பிராணிகள் நல உறுப்பினர் எல்லப்பன், புளு கிராஸ் அமைப்பைச் சேர்ந்த பனிமா, ராஜேஷ் ஆகியோர் கண்காணித்தனர்.
காளைகளை அடக்க 200-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீல நிற பனியனும், கால்சட்டையும் சீரூடையாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை காண நேற்று காலை முதலே பார்வையாளர்கள் திரண்டு வந்தனர். காலரிகள் நிரம்பி வழிந்தன. தடுப்புகளுக்கு வெளியே ஏராளமானோர் கூடி நின்றனர். அமெரிக்கா, ஜப்பான் உள்பட அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் சுமார் 200 பேர் ஜல்லிக்கட்டை காண வந்திருந்தனர். மொத்தம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து இருந்தனர்.
பகல் 11.30 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு, முதலில் முனியாண்டி கோயில் மாடு விடப்பட்டது. அது கோவில் மாடு என்பதால் அதை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் தனியார் மாடுகள் ஒவ்வொன்றாக விடப்பட்டன. ஓங்கிய திமிலுடன் கூடிய காளைகள் வீரர்களை பயமுறுத்தியபடி வந்தன. அவை சிறிது நேரம் வாடிவாசலில் நின்று கால்களால் மண்ணை கிளரி நோட்டம் பார்த்த பின்னரே சீறிப்பாய்ந்தன. காளைகள் பிடிக்க வந்த வாலிபர்களை கொம்புகளால் குத்தி பந்தாடியது. அவர்கள் சினிமா சண்டை காட்சியில் வருவதுபோல் தூக்கி வீசப்பட்டனர்.
அதேநேரம் வீரர்களும் சளைக்காமல் காளையை துரத்திச் சென்று அதன் திமிலை பிடித்து அடக்கினர். ஒருசில வீரர்கள் பாய்ந்து வந்த காளையை நேர் எதிரே நின்று அடக்க போரிட்டனர். இந்த காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஜல்லிக்கட்டில் 66 பேர் மட்டுமே காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாடுகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக் காசு, பீரோ, கட்டில், அண்டா மற்றும் பணமுடிப்புகள் வழங்கப்பட்டன. காளைகளை யாரும் அடக்காவிட்டதால் அந்த பரிசு மாட்டின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டது.