அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து முடிந்தது!
வியாழன், 17 ஜனவரி 2008 (20:45 IST)
தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை தன்னகத்தே ஈர்த்திருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பலத்த பாதுகாப்பிற்க்கும், கட்டுப்பாடுகளுக்குமிடையே இன்று மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
பொங்கல் திருநாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடந்துவரும் ஜல்லிக்கட்டிற்கு உச்ச நீதிமன்றம் முதலில் தடை விதித்து, பிறகு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி அளித்ததையடுத்து, இன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையின் கீழ் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு துவங்கியது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகள் முதலில் சோதிக்கப்பட்டன. பிறகு காளைகளை அடக்கத் திரண்ட காளையர்கள் நன்கு சோதிக்கப்பட்டவுடன், அனுமதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீல நிற அரைக்கால் சட்டையும், அதே நிறத்தினாலான பனியனும் அளிக்கப்பட்டது.
பட்டியிலிருந்து காளைகள் ஒவ்வொன்றாகத் திறந்து விடப்பட்டதும், அவைகளை நோக்கிப் காளையர்கள் தீரத்துடன் பாய்ந்தனர். காளையின் வாலைப் பிடிக்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததால், அவ்வாறு வாலைப்பிடித்த ஒருவரை காவலர்கள் வெளியேற்றினர்.
காளைகளைப் பிடிப்பதில் ஈடுபட்ட பலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. ஒரு போட்டியாளருக்கு மட்டும் சற்று ஆழமான காயம் ஏற்பட்டது. அவர் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாலை சரியாக 5 மணி வரை 500-க்கும் அதிகமான காளைகள் களமிறங்கின. 600-க்கும் மேற்பட்ட காளையர்கள் பங்கேற்றனர். போட்டி முடியும் வரை மதுரை மாவட்ட ஆட்சியர் ஜவஹர் அங்கிருந்த முழுமையாக மேற்பார்வையிட்டார்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், விலங்கின நல வாரியத்தின் சார்பாகவும் போட்டி முழுமையாக படம் பிடிக்கப்பட்டது.