எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி அவரது ராமாவரம் இல்லத்திற்கு ஜெயலலிதா இன்று சென்றார். அங்கு வாயிலில் அமைக்கப் பட்டிருந்த புதிய கொடி மரத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் எம்.ஜி.ஆர் இல்ல வளாகத்திலுள்ள அவரது நினைவகத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு எம்.ஜி.ஆர் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருடன் பேசி நலம் விசாரித்தார். எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களையும், கேடயங்களையும் பார்வையிட்டார். இதனையடுத்து எம்.ஜி.ஆர் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் வாய்பேச முடியாத, காது கேளாதோர் இல்ல மேல்நிலைப்பள்ளிக்கு ஜெயலலிதா சென்றார். அங்குள்ள வகுப்பறைகளை பார்வையிட்டார்.
அதன் பிறகு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அதன் பின்னர் அவர்களிடையே ஜெயலலிதா உரையாற்றினார். விழாவில், மாணவர்களும், எம்.ஜி.ஆர் குடும்பத்தினரும் ஜெயலலிதாவுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். முடிவில் பள்ளியின் சார்பில் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.