துக்ளக் வார இதழின் 38வது ஆண்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக இன்று காலை மோடி திருவனந்தபுரத்திலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் மோடியை தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் திருநாவுக்கரசர், பொன்.ராதா கிருஷ்ணன், சோ உள்பட மாநில நிர்வாகிகள் வரவேற்றனர். நரேந்திர மோடி வருகைக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்பட சில அரசியல் கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மோடி வருகையையொட்டி சென்னை விமான நிலையம், பா.ஜ.க. அலுவலகம் அமைந்துள்ள தி.நகர் வைத்யராம் தெரு, போயஸ் கார்டன், சென்னை சேத்துப்பட்டு மற்றும் காமராஜர் அரங்கம் ஆகிய பகுதிகளில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படை, ஆயுதப்படையினர் குவிக்கப்பட்டிருப்பதுடன், வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காமராஜர் அரங்கத்தின் அருகே அமைந்துள்ள ஆயிரம் விளக்கு மசூதியை சுற்றியும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.