''பொங்கல் திருநாள் தமிழ் மக்களின் பொதுப் புனித நாளாக போற்றப்பட வேண்டும்'' அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
என்.வரதராஜன் (மார்க்சிஸ்ட்) : நாட்டின் உழவர் பெருமக்களின் வாழ்வில் புத்தொளியும் புதுப்பொலிவும் ஏற்பட ஒன்றுபட்டு முயல்வோம். செம்மொழியாக அங்கீகாரம் பெற்று இயங்கும் தமிழ்மொழி, இன்றைய உலகியலின் புதுமைகளுக்கு ஈடுகொடுக்கும்விதமாக வளமை பெற, மக்கள் பேச்சு வழக்கு முதல் நீதிமன்றம் ஈறாக எல்லாவற்றிலும் இடம்பெற்று சிறக்க இசைப்போம், உழைப்போம்.
தா.பாண்டியன் (இந்திய கம்யூ.) : தமிழ் மக்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகையில் சாதி மத வேறுபாடு இல்லை. இந்த நாள் தமிழ் மக்களின் பொதுப் புனித நாளாக போற்றப்பட வேண்டும். பால் பொங்குவதுடன், இனிப்பு பொங்கல் வழங்கப்படுவதுடன் மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறோம். இந்த நாளில் உண்டி கொடுத்து உயிர் காத்திட, பசி, பிணி, அறுக என்ற லட்சியத்தை அடையவும் உறுதி ஏற்போம்.
விஜயகாந்த் (தே.மு.தி.க.): பொங்கல் திருநாள், உழைப்புக்கு உயர்வு தரும் நன்னாள். விடா முயற்சிக்கு பலன் தரும் நாள். அதனாலேயே இந்த நாள் எல்லா தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. உலகத்துக்கு அச்சாணி போல உள்ள உழவர்களின் நிலை, இன்று கவலைத்தரத்தக்க நிலையில் உள்ளது. பாடுபட்டு உழைத்தும் பலன் இல்லை. எல்லா தரப்பு மக்களுக்கும் உணவு படைக்கும் தாயுள்ளம் கொண்ட விவசாயிகளை கைதூக்கி விடுவதே எல்லோரது கடமை. சமுதாயத்தில் சமத்துவம் மட்டும் போதாது, சமவாய்ப்பும் தேவை. அப்போதுதான் சமவாழ்வு கிடைக்கும். இப்பொங்கல் திருநாள், சமவாழ்வு பொங்கலாக அமைய வாழ்த்துகிறேன்.
சரத்குமார் (அ.இ.ச.ம.க.): பொங்கல் திருநாள் சாதி மத, மொழி வேறுபாடுகளை கடந்து கொண்டாடப்படும் பெருநாள். தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தும் நாள். அனைவரும் உழைக்க வேண்டும். உழைத்துப் பெற்ற செல்வத்தை பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற தத்துவத்தை பொங்கல் திருநாள் பறைசாற்றுவதால் இது தலைசிறந்த சமத்துவ நாளாக திகழ்கிறது. பயங்கரவாதம், வன்முறை, சமூக தீமைகள் போன்ற கொடுமைகள் அழிந்து மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இதேபோல் தமிழ்நாடு மதச்சார்பற்ற ஜனதா தள பொதுச் செயலாளர் இதயவண்ணன், மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.