ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததைக் கண்டித்து அலங்காநல்லூர், பாலமேட்டில் இன்றும் 2-ஆவது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி அலங்காநல்லூர் பழைய காவல் நிலையம் முன்பு உண்ணாவிரதம் நடைபெற்றது. இதேபோல பாலமேடு பேருந்து நிலையம் முன்பும் உண்ணாவிரதம் நடைபெற்றது. இவற்றில் 1,000 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்
ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அலங்காநல்லூர், பாலமேடு சுற்று வட்டார கிராம மக்கள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 11 மணி அளவில் மதுரை ரயில் நிலையத்துக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர். பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது. இதற்காக மதுரை ஆட்சியர் ஜவஹர் மற்றும் உயர் அதிகாரிகள் டெல்லி செல்ல உள்ளனர்.
ஆட்சியர் பேச்சு!
முன்னதாக நேற்று, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூர் பகுதி முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனால் காவலர்கள் குவிக்கப்பட்டனர். அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகள் நடமாட தடை விதிக்கப்பட்டது.
அலங்காநல்லூர் சுற்று வட்டார கிராம மக்களை மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ்.ஜவஹர் அழைத்து பேசினார். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்று கிராம மக்கள் ஆவேசமாக கூறினர். இதையடுத்து ஆட்சியர் ஜவகர், கிராம மக்களின் உணர்வுகளை அரசிடம் எடுத்துரைப்பதாக உறுதி அளித்தார்.
கூட்டம் முடிந்ததும் அலங்கா நல்லூர் திரும்பிய கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை உணர்த்தும் வகையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் கடைகளை அடைத்தனர். இதன் காரணமாக கிராம பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.