இது குறித்து அமைச்சர் பரிதி இளம்வழுதி கூறுகையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 அடுக்கு பாதாள இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டப்படுகிறது. அதில் 6,000 வாகனங்கள் நிறுத்தலாம். ஒரு அடுக்கில் 3,000 வாகனம் வீதம் 2 அடுக்கிலும் வாகனங்களை `பார்க்' செய்யலாம். இந்தியாவிலேயே முதன் முதலாக பாதாள வாகன நிறுத்துமிடம் சென்னையில் முதன் முதலாக அமைகிறது.
தரைப்பகுதியில் அழகிய பூங்கா அமைக்கப்படுகிறது. புல் தரை அமைத்து சிறுவர்கள் சறுக்கு விளையாட விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்படும். பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும்போது பூங்காவில் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்கலாம் 8 மீட்டர் பள்ளம் தோண்டப்பட்டு பாதாள வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. மார்ச் மாதம் பணிகள் தொடங்கி 18 மாதத்தில் முடிவடையும். உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். கோயம்பேடு பேருந்து நிலைய முகப்பில் முதலமைச்சர் கருணாநிதியின் 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையையொட்டி பொன்விழா வளைவு அமைக்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரியத்தை வலியுறுத்தும் வகையில் இவை நிறுவப்படுகிறது என்று அமைச்சர் பரிதி இளம் வழுதி கூறினார்.