''இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அடுத்து மலேசியாவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும்'' என்றும் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியாவில் இந்துக்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஹிண்ட்ராஃப் தலைவர்களுக்கு பயங்கரவாத இயக்கங்களோடு தொடர்பு இருப்பதாக பொய்க்குற்றம் சாட்டி அவர்களை ஒடுக்க மலேசிய அரசு நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்கு உரியது. இந்து மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் மேற்படிப்பு படிக்க அனுமதியில்லை, இளைஞர்கள் வேலையிலிருந்து விரட்டியடிக்கப்படுகிறார்கள். இந்து தொழிலாளர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்படுகின்றன. கோவில்கள் உடைக்கப்படுகிறது. இதுதான் மலேசியாவில் இந்துக்களின் அவலநிலை.
தங்களுடைய குறைகளை கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டம் நடத்துவது உலகில் எல்லா மக்களுக்கும் அளிக்கப்பட்ட அடிப்படை சுதந்திரம். இதை மலேசிய அரசு மீறி வருகிறது. காமன்வெல்த் உறுப்பு நாடாக உள்ள மலேசிய அரசின் காட்டுமிராண்டி நடவடிக்கையை கண்டித்து காமன்வெல்த் மலேசியாவை உறுப்பு நாட்டிலிருந்து நீக்க வேண்டும்.
மலேசிய அரசுக்கு ஆதரவாளர்களான தமிழ்த் தலைவர்களை தங்களின் கைப்பாவையாக்கிக் கொண்டு அரசுக்கு ஆதரவாக அறிக்கை விட வைக்கிறார்கள். இந்தநிலையில் மலேசிய இந்து மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை பாமாயில் உட்பட எந்தப் பொருளையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். மலேசிய அரசின் மீது பொருளாதாரத் தடை விதித்து இந்துக்களைப் பாதுகாக்க நிர்ப்பந்திக்க வேண்டும். மேலும் தனியார் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் மறுக்க வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே மலேசியாவில் இந்துக்கள் தன்மானத்துடனும், பாதுகாப்புடனும் வாழ முடியும் என்று ராமகோபாலன் கூறியுள்ளார்.