உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியை காண லட்சக்கணக்கான மக்கள் பார்க்க வருவார்கள். அப்படிப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஆண்டு சில நிபந்தனையுடன் நடத்த மதுரை உயர் நீதிமன்ற கிளை அனுமதி அளித்தது.
இந்த நிலையில் விலங்குகளை கொடுமைப்படுத்தும் எந்த போட்டியையும் அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா? நடக்காதா என்ற குழப்பம் எழுந்த நிலையில், தமிழர் வீரவிளையாட்டு பாதுகாப்பு குழு தடையை மீறி ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழர் வீரவிளையாட்டு பாதுகாப்பு குழு தலைவர் ரித்திஷ்குமார், செயலாளர் ஒண்டிராஜ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ஜல்லிக்கட்டு, தமிழர்களின் வீரவிளையாட்டு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்விளையாட்டு இருந்ததாக ஓலைச்சுவடிகள் தெரிவிக்கின்றன.
ஒரு மாவட்டத்துக்கு 2 ஆயிரத்து 500 ஜல்லிக்கட்டு மாடுகள் வீதம் பல மாவட்டங்களில் இதற்கென்றே மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
பாரம்பரியம் மிக்க இந்த விளையாட்டை காண ஒவ்வொரு ஆண்டும் அயல்நாட்டினர் வருகின்றனர். பல கிராமங்களில் இப்போட்டிகள் நடக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த முடியாது, தடையை மீறி இப்போட்டி நடைபெறும். தமிழனின் வீரமும், பாரம்பரிய பண்பாடும் பாதுகாக்கப்பட தமிழர்கள் வீரவிளையாட்டு பாதுகாப்பு குழு போராடும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.