ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரும் மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசு அதிகாரிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உத்தரவாத்தை ஏற்க மறுத்தது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி அலங்காநல்லூர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகளவில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மிருகவதையும், மனித உயிரிழப்பும் ஏற்படுவதாக பிராணிகள் நல அமைப்புகள் சார்பில் புகார்கள் குவிந்ததையடுத்து, இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
ஆயினும், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சி வழக்கம்போல் நடந்தது. உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை.
இந்தப் பிரச்சனை தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், பிராணிகள் நல வாரிய உறுப்பினருமான மேனகா காந்தி உள்பட சிலர் உச்ச நீதிமன்றத்தில் தடை கோரி அளித்த மனுவில், 'ஜல்லிக்கட்டு' என்ற பெயரில் மாடுகள் வதைக்கப்படுவதோடு, அவற்றுக்குப் போதை மருந்துகள் அளிக்கப்படுவதாகவும், மாடு பிடிப்போருக்கும், பார்வையாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரும் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு இன்று நடந்தது. அப்போது,கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் ஜவகர் உள்ளிட்ட அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.
இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் விதித்த தடை அப்படியே தொடரும். 'ரேக்லா' போட்டியை பாதுகாப்புடன் நடத்த வேண்டும். இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டும் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்த மதுரை மாவட்ட மக்கள், நீதிமன்ற தடையால் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.