தமிழகக் கல்வி நிறுவனத்திற்கு நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்து: மத்திய அரசு
வெள்ளி, 11 ஜனவரி 2008 (11:14 IST)
தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் பொன்னையா-ராமஜெயம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஸ்ரீ பொன்னையா ராமஜெயத்தம்மாள் கல்வி அறக்கட்டளை தஞ்சாவூரில் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை பொன்னையா-ராமஜெயம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், பொன்னையா ராமஜெயம் கல்லூரி, பி.ஆர்.பொறியியல் கல்லூரி மற்றும் பொன்னையா ராமஜெயம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.
இந்த அறக்கட்டளை தனது கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்து நிகர்நிலை பல்கலைக் கழக அந்துஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு விண்ணப்பித்திருந்தது.
விதிமுறைகளின்படி விண்ணப்பத்தை ஆய்வு செய்து, அந்த கல்வி நிறுவனத்திற்கு நிகர்நிலை அந்தஸ்து வழங்குவதாக அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுபற்றி மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது :
பல்கலைக் கழக மானியக் குழு சட்டம் 1956-ன்படி, பல்கலைக் கழக மானியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பொன்னையா ராமஜெயம் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பல்கலைக் கழக ஆய்வுக் குழு இந்த கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் இந்த அந்தஸ்து நிரந்தரமாக்கப்படும்.
தற்போது இந்த கல்வி நிறுவனங்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த புதிய அந்தஸ்தத்தை தொடர்ந்து பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் இருந்து பொன்னையா ராமஜெயம் கல்வி நிறுவனங்கள் விடுவிக்கப்படும். அன்றிலிருந்து ஐந்தாண்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
பொன்னையா ராமஜெயம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்திற்கு இந்திய அரசோ அல்லது பல்கலை மானியக் குழுவோ எந்தவித திட்டம் அல்லது திட்டம் இல்லாத வகையில் நிதியுதவியும் அளிக்கவில்லை.
இவ்வாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.