மண்வாசனை படத்தில் அறிமுகமாகி ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகர் பாண்டியன் இன்று மதுரையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. குடல்வால் அறுவைசிகிச்சை செய்து கொண்ட பாண்டியன், சில காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பாண்டியனின் இறுதிச் சடங்குகள் நாளை அவரது சொந்த ஊரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியனின் மறைவுக்கு திரைப்படத் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
புதுமைப் பெண், கிழக்குச் சீமையிலே, குரு சிஷ்யன், நாடோடித் தென்றல் உட்பட 87க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாண்டியன் நடித்துள்ளார்.
நடிகர் பாண்டியன் சில காலம் தி.மு.க.வில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார்.
ஜெயலலிதா இரங்கல்!
பாண்டியனின் மறைவுக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளரும், நடிகருமான பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.
அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கைகளையும், சாதனைகளையும் பிரச்சாரம் செய்ததோடு நல்ல முறையில் கட்சி பணியாற்றியவர். மண்வாசனை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து தனக்கென தனிமுத்திரையை பதித்தவர். அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.