''இலங்கைக்கு அளிக்கப்படும் ஆயுதங்கள் தமிழர்களுக்கு மீது தாக்குதல் நடத்தவே பயன்படுத்தப்படும்'' என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் குற்றம்சாற்றியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தேச பக்த அமைப்புகள் ஒருபுறமும், தீவிரவாதம் மற்றும் பிரிவினை வாதத்தை ஆதரிக்கும் அமைப்புகள் மறுபுறமும் இரண்டு சக்திகளாக செயல்படுகின்றன. இதில் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் சக்திகள் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறது.
பயங்கரவாதிகளுக்கு மோடி எமனாகவும், தேசியவாதத்தின் சின்னமாகவும் செயல்படுகிறார், அவரை எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகள். மோடியை எதிர்ப்பவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட வேண்டும். அவருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். சிறந்த காவல்துறை அதிகாரியை மோடியின் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழகத்தின் எல்லைகள் அனைத்திலும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ஆந்திர எல்லையில் நக்சலைட்டுகள், கேரள எல்லையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஊடுருவல் போன்ற செயல்களால் தமிழகத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
இலங்கை பிரச்சனையில் அங்கு வாழும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு. இலங்கை அரசு இதற்கு முன் ஏற்படுத்திக்கொண்ட எந்த ஒப்பந்தத்தையும் நடைமுறைப் படுத்தியது கிடையாது. இலங்கைக்கு அளிக்கப்படும் ஆயுதங்கள் தமிழர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தவே பயன்படுத்தப்படும்.
ஜெயலலிதாவுடன் மோடி, பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் சந்திக்கும்போது கூட்டணி பற்றி பேசப்படாது. நட்பு ரீதியில் மட்டுமே இந்த சந்திப்பு நிகழும் என்று இல.கணேசன் கூறினார்.