தமிழகத்தில் நாளை கிராம வங்கிகள் வேலை நிறுத்தம்!
புதன், 9 ஜனவரி 2008 (16:04 IST)
நீதிமன்ற உத்தரவு படி வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையான அலவன்ஸ், சலுகைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் மண்டல கிராம வங்கி ஊழியர்கள் நாளை முதல் 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்தியா முழுவதும் மண்டல கிராம வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. கிராம வளர்ச்சியை முன்நிறுத்தி செயல்படும் இந்த வங்கிகள் தமிழகத்தில் பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 203 கிளைகள் உள்ளன. இவற்றில் 575 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
நீதிமன்றம் உத்தரவுப்படி வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையான அலவன்ஸ், சலுகைகள் வழங்க வேண்டும். ஓய்வூதியம் அளிக்க வேண்டும், கருணை அடிப்படையில் வாரிசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அகில இந்திய அளவில் நாளை (10ஆம் தேதி) மற்றும் 11ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கிராம வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
கிராம வங்கிகள் கடலூர், தர்மபுரி, விருதுநகர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் தான் அதிக அளவில் செயல்படுகின்றன. இந்த போராட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது என்று சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியுள்ளார்.