ஜெயல‌லிதா சொ‌ல்வது பொ‌ய் : வீரபா‌ண்டி ஆறுமுக‌ம்!

புதன், 9 ஜனவரி 2008 (16:01 IST)
''திடீர் மழையால் நெல் மூட்டைகள் நாசம் அடைந்ததாக ஒரு பொய்யான அறிக்கை விட்டு விவசாயிகளிடம் பரபரப்பை ஏற்படுத்த ஜெயலலிதா முயற்சிக்கிறார்'' எ‌ன்று வே‌ளா‌ண்மை‌ததுறை அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌‌‌றி‌த்து அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திலும், திருக்கோயிலூர் (அரகண்ட நல்லூர்) ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் கடந்த 4-1-08 அன்று பெய்த திடீர் மழையால் நெல் மூட்டைகள் நாசம் அடைந்ததாக ஒரு பொய்யான அறிக்கை விட்டு விவசாயிகளிடம் பரபரப்பை ஏற்படுத்த ஜெயலலிதா முயற்சிக்கிறார்.

மழை விட்ட சில நாட்களிலேயே அறுவடை இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்யப்பட்ட நெல் அனைத்தும் ஒரே நேரத்தில் விற்பனைக் கூடங்களுக்கு வந்ததால் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் நெல் மூட்டைகள் முதல் 15 ஆயிரம் மூட்டைகள் வரை வரத்து இருந்தது. செஞ்சி, திருக்கோவிலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் 5 ஆயிரம் மூட்டைகள் முதல் 7 ஆயிரம் மூட்டைகள் வரை இருப்பு வைத்து ஏலம் விடும் வசதி உள்ளது.

ஒரே நேரத்தில் நெல் அறுவடை செய்யப்பட்டதால் 3-1-08 அன்று வியாபாரிகளால் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை வெளியேற்ற இயலாததால் 4-1-08 அன்று விற்பனைக்கு வந்த அனைத்து நெல் மூட்டைகளும் வெளியே வைத்து ஏலம் விடப்பட்டதும் அப்பகுதி விவசாயிகளுக்கு நன்கு தெரியும். செஞ்சியில் ஏலம் 10.30 மணிக்குள் முடிவடைந்த நிலையில், பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை மழை பெய்துள்ளது. திருக்கோவிலூரில் 10.30 மணிக்குள் ஏலம் முடிவடைந்த நிலையில் 11 மணி முதல் 11.30 மணி வரை மழை பெய்துள்ளது.

ஏலம் முடிவடைந்த நிலையில் விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகை எவ்வித நட்டமும் இன்றி அளிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளோ, வியாபாரிகளோ ந‌ஷ்டம் என புகார் அளிக்கப்படவில்லை. வியாபாரிகளும் நெல்லை அரவைக்கு எடுத்து செல்வதால் அவர்களுக்கு ந‌ஷ்டம் ஏற்படவில்லை. தமிழகத்தை 2 முறை ஆட்சி செய்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் திறந்த வெளி விற்பனை கூடங்கள் அனைத்திற்கும் மேற்கூரை அமைத்து தர நடவடிக்கை எடுக்காதது ஏன்?

அரசியலில் ஏதாவது குறைபாடு கிடைக்காதா என ஏங்கி கிடப்பவர்களுக்கு செய்தி தாள்களில் வந்த புகைப்படத்தைப் பார்த்து அரசியல் லாபம் தேட முயற்சிப்பவர்களை விவசாயிகளும், வியாபாரிகளும் ஏற்க மாட்டர்கள் எ‌ன்று அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்