நல்லகண்ணுவிற்கு அம்பேத்கர் விருது!

புதன், 9 ஜனவரி 2008 (18:03 IST)
தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் மேம்பாட்டிற்காக பாடுபட்டதற்காக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணுவை டாக்டர் அம்பேத்கர் விருதிற்கு தமிழக அரசு தேர்வு செய்துள்ளது!

1998 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு டாக்டர் அம்பேத்கர் விருதை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலராக இருந்த நல்லகண்ணுவிற்கு 2007 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதை வழங்கப் போவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று கூடிய உயர்மட்டக் குழு, தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக, குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட சிறந்த அரசியல்வாதி நல்லகண்ணு என்றும், அவருக்கு அம்பேத்கர் விருதை வழங்குவதென்றும் தீர்மானித்ததென அச்செய்திக் குறிப்பு கூறுகிறது.

வரும் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் நல்லகண்ணுவிற்கு விருதும், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், தங்கப் பதக்கமும் அளிக்கப்படும்.

அந்த விழாவிலேயே திருவள்ளுவர் விருது, பெரியார் விருது, அண்ணா விருது, காமராஜர் விருது, பாரதியார் விருது, திரு.வி.க. விருது, பாரதிதாசன் விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன் ஆகிய விருதுகளும் வழங்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்