பா. ஜ.க.வுடன் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் பரிசீலிப்போம்: இந்திய தேசிய லீக் அறிவிப்பு!
புதன், 9 ஜனவரி 2008 (10:40 IST)
''பாரதிய ஜனதா கட்சியுடன் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் எங்களது பொதுக்குழு கூடி கூட்டணி பற்றி முடிவு செய்வோம்'' என்று இந்திய தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அகமது கூறினார்.
இந்திய தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அகமது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுலைமான் எங்களால் நியமனம் செய்யப்பட்ட தலைவர். அவர் தனிநபர். அவரது அறிவிப்பு எங்களை கட்டுப்படுத்தாது. ஒரு மலிவான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இனியும் அவதூறு பரப்பினால் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம்.
அ.இ.அ.தி.மு.க.வுடன் எங்கள் கூட்டணி வலுவாகவும், உறுதியாகவும் உள்ளது. நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்ததும், சென்னை வரும்போது தேநீர் விருந்து கொடுப்பதாக அறிவித்திருப்பதும் அரசியல் நாகரீகம் தானே தவிர கூட்டணிக்காக அல்ல. அவரும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி என்று அறிவிக்கவில்லை. அப்படி அறிவிக்க மாட்டார் என்று நம்புகிறோம். ஒரு வேளை அ.இ.அ.தி.மு.க. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் எங்களது பொதுக்குழுவை கூட்டி எங்களது நிலையை முடிவு செய்வோம்.
நரேந்திர மோடியை பொறுத்தவரை முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த எதிரியாகத் தான் கருதுகிறோம். அவர் சென்னை வரும்போது கருப்புக் கொடி காட்டுவோம். தமிழக அரசு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீத இடஒதுக்கீடு அறிவித்தது. ஆனால் அரசு தேர்வாணையம் சமீபத்தில் காலியிடங்களை நிரப்ப அறிவித்ததில் முஸ்லிம்களுக்கு மிகவும் குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே முதலமைச்சர் கருணாநிதி இந்த இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று பஷீர் கூறினார்.