மத்திய அரசின் விவசாயக் கொள்கைகள் தோல்வி: பிரகாஷ் காரத்!
புதன், 9 ஜனவரி 2008 (10:19 IST)
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் விவசாயக் கொள்கைகள் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் குற்றம்சாற்றி உள்ளார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு ஒன்றைத் துவக்கி வைத்த பிரகாஷ் காரத் பேசியதாவது:
மத்திய அரசின் தவறான விவசாயக் கொள்கைகளால் விவசாய விளை பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இதனால் கோதுமையைக் கூட இருமடங்கு விலை கொடுத்து அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
பல மாநிலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. விவசாயிகள் தொடர்ந்து கடனில் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த 1997 முதல் 2005 வரை 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதே இதற்குத் தக்க சான்றாகும்.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 9 விழுக்காட்டை நோக்கி நகருவதாக மத்திய அரசு பெருமை தெரிவிக்கிறது. ஆனால், இது இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை 26 இல் இருந்து 48 ஆக உயர்த்துவதற்குத் தான் பயன்பட்டுள்ளது.
இந்த வகையான வளர்ச்சியால் தான் பஞ்சாப், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது ஆட்சியை இழந்தது. இதை பா.ஜ.க. போன்ற மதவாத சக்திகள் தங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டன.
பொதுமக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுமே தோல்வியைச் சந்தித்துள்ள காரணத்தால், மதசார்பற்ற கட்சிகளையும் மற்ற இடதுசாரிக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்து வருகிறது.
மூன்றாவது அணி என்பது ஒரே இரவில் உருவாகும் விடயமல்ல. உழைக்கும் மக்களுக்காகப் போராடுவதன் மூலம் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் கட்சித் தொண்டர்கள் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார்.