2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று அதன் தமிழக தலைவர் எம்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் வரும் போது யாருடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என்பது குறித்து மேலிடம் முடிவு செய்யும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காஞ்சிபுரம், மதுரையில் நடந்த கட்சியின் மண்டல மாநாடுகள் சிறப்பாக நடைபெற்றன. இதேபோல, திருச்சி, சேலம் அல்லது கோவையிலும் மண்டல மாநாடுகள் நடைபெற உள்ளன. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி அமைக்கும். அதற்கு ஏற்ப கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது, தி.மு.க.வுடன் எங்களுக்கு கூட்டணி உள்ளது. ஆனால் தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நாங்கள் கடந்த ஒரு வருடக்காலமாக பேசி வருகிறோம். ஆனால் இது குறித்து முதலமைச்சரும், கட்சி தலைவர் சோனியா காந்தியும் தான் முடிவு எடுக்க வேண்டும்.
சிமெண்ட் விற்பனை நியாயவிலைக் கடைகள் மூலம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம் சிமெண்ட் கடத்தல், அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி கடத்தலை தடுக்க நியாயவிலைக்கடைகள் முன்பு போராட்டம் நடத்த வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். அது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசனை செய்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்வோம். மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி என்றைக்கும் தயங்கியது இல்லை என்று மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.