ஈரோட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை

திங்கள், 7 ஜனவரி 2008 (10:05 IST)
ஈரோடு மக்கள் நெரிசல் அதிகமுள்ள இந்திரா நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் அருகே இந்திராநகர். இங்குள்ள கற்பகம் லேஅவுட்டை சேர்ந்தவர் இப்ராஹீம் (38). காவேரி பாலம் அருகே உள்ள மீன் கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் மனைவி பானு குமாரபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்துக்கு நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் சென்றார்.
இப்ராஹீம் கடையில் இரவு வேலைக்காக சென்றார். கடை வேலையை முடித்துக் கொண்டு காலை 6 மணிக்கு மேல் இப்ராஹீம் வீட்டுக்கு வந்தார்.

வீட்டு கதவு திறந்திருந்திருந்தது. ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வந்திருப்பர் என்று எண்ணிய இப்ராஹீம் வீட்டை திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டில் யாரும் இல்லை. பிராந்தி குடித்த எச்சில் டம்ளர் மற்றும் மிக்சர் சிதறி கிடந்தது. சந்தேகமடைந்த இப்ராஹீம் கருங்கல்பாளையம் காவ‌‌ல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

காவ‌ல்துறை‌யின‌ர் சம்பவம் நடந்த வீட்டை சோதனையிட்டனர். அப்போது வீட்டு பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் ரேகை பதிவு செய்தனர். கருங்கல்பாளையம் காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்