உலகம் முழுவதும் ஒரே பொறியியல் பாடத்திட்டம்

திங்கள், 7 ஜனவரி 2008 (10:05 IST)
உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக பொறியியல் பாடங்கள் அமைய வேண்டும் என பெருந்துறையில் நடந்த பொறியியல் கல்லூரி கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

வளங்களின் பயன்பாடும் புத்திசார் அமைப்புகளும் என்ற தலைப்பில் இரண்டாவது சர்வதேச கருத்தரங்கு மூன்று நாட்கள் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் நடந்தது.

கருத்தரங்கு நிறைவு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக புதுடில்லி அகில இந்திய தொழில் நுட்ப கழக செயல் உறுப்பினர் டாக்டர் நாராயணராவ் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை மக்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்ட வேண்டும். பொறியியல் பாடங்கள் உலக முழுவதும் ஒரே மாதிரியாக அமைய வேண்டும். நான்கு ஆண்டு படிப்பில் மூன்று ஆண்டுகள் பாடங்களை படிக்க வேண்டும்.

நான்காம் ஆண்டு தொழிற்சாலைகளில் பயிற்சி பெற வேண்டும். இதை அடிப்படையாக கொண்டு பொறியியல் பாட திட்டங்கள் அமைக்க பரிந்துரை செய்துள்ளோம்.

11வது ஐந்தாண்டு திட்டத்தில் ஆண்டுதோறும் ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம் ‌எ‌ன்ற அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்