2011ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்நிறுத்தி தே.மு.தி.க., பா.ம.க. போன்ற கட்சிகள் பேசி வரும் மூன்றாவது அணியில் மார்க்சிஸ்ட் கட்சி இடம் பெறுமா? இல்லையா என்ற பிரச்சனையே எழவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் கூறியுள்ளார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் என்.வரதராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்கியுள்ள காங்கிரஸ் கட்சியை, ஒரு மதச்சார்பற்ற கட்சி என்ற முறையில் பாரதிய ஜனதாவிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே நாட்டின் வெளியுறவுக் கொள்கை, இறையாண்மை, தாராள மயப் பொருளாதாரக் கொள்கைப் பிரச்சனைகளில் கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவியபோதும், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக சி.பி.ஐ.எம். உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவை நீடித்து வருகின்றன.
ஆனால் இன்றைய மத்திய அரசு பின்பற்றி வருகின்ற பொருளாதாரக் கொள்கைகள் நாட்டு மக்களின் வாழ்க்கையை சிதைத்தே வந்துள்ளது. மக்கள் நலன் குறித்த இந்த அரசின் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை ஏட்டுச் சுரைக்காயாகவே நின்றுள்ளன. எனவே மத்திய காங்கிரஸ் ஆட்சியின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும் மக்களைத் திரட்டித் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. வகுப்புவாதம் பொருளாதார தாராளமயத்திற்கு எதிரான ஒரு கொள்கை அடிப்படையிலான மூன்றாவது மாற்று ஒன்றை மக்கள் பிரச்சனைகள் மீதான போராட்ட இயக்கங்கள் மூலமாகக் கட்டுகிற முயற்சியில் சி.பி.ஐ.எம். ஈடுபட்டுள்ளது.
ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்தக் கொள்கை அடிப்படையிலான நிலைபாட்டை, தமிழ்நாட்டில் ஒருசிலர் எழுப்பி வருகிற தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத மூன்றாவது அணி என்ற பிரச்சனையோடு முடிச்சுப் போட்டு, ஒரு தவறான சித்திரம் தமிழக மக்கள் முன்பாக வைக்கப்படுகிறது.
மதுரையில் வரும் 8,9,10 தேதிகளில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 19வது மாநாடு மற்றும் கோவையில் மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடக்கவுள்ள கட்சியின் அகில இந்திய 19வது மாநாடும், தேசிய அளவிலான பிஜேபி காங்கிரஸ் அல்லாத மாற்றுக் கொள்கை மேடை ஒன்றை விவாதித்து உருவாக்க உள்ளது.
2011ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்நிறுத்தி தே.மு.தி.க., பா.ம.க. போன்ற கட்சிகள் பேசி வரும் மூன்றாவது அணியில் மார்க்சிஸ்ட் கட்சி இடம் பெறுமா? இல்லையா என்ற பிரச்சனையே எழவில்லை என்று என்.வரதராஜன் கூறியுள்ளார்.