''ராமர் சேது பாலத்தை உடைப்பதற்கு வெடிப்பொருட்களை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கான ஒப்புதலை வழங்க முடியாது என்று தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழகம் 2002ஆம் வருடத்திய அறிக்கையில் தெரிவித்து உள்ளதால் சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி வலியுத்தியுள்ளார்.
சென்னையில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் படி சேதுசமுத்திரத் திட்டப்பணிகளை துவங்குவதற்கு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் அவசியமாகும். ஆனால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் சான்றிதழ் வழங்குவதற்கு முன்னரே 2005ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சேது சமுத்திரத்திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார்.
1999ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியிட்ட கடிதத்தில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், சேது சமுத்திரத் திட்டம் சுற்றுச் சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று கூறி அதனை ஒட்டு மொத்தமாக கைவிட வேண்டும் என்று தரை வழிப் போக்குவரத்து அமைச்சகத்தை அறிவுறுத்தியது. எனவே, சேது சமுத்திரத்திட்டம் சட்ட விரோதமானது.
ராமர் சேது பாலத்தை உடைப்பதற்கு வெடிப்பொருட்களை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கான ஒப்புதலை வழங்க முடியாது என்று தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழகம் 2002ஆம் வருடத்திய அறிக்கையில் தெரிவித்து உள்ளது. எனவே, தனுஷ்கோடி அருகே வெடிப் பொருட்கள் பயன்பாடு தேவைப்படும் என்பதால் தற்போதைய 5ம் வழியை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழகம் நிராகரித்தது.
ஆகவே சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு இந்த திட்டத்திற்கு பதிலாக, தூத்துக்குடியையும், கொல்கத்தாவையும் இணைக்கும் வகையில் விசாகப்பட்டினம் வழியாக இரட்டை அகல ரெயில் பாதை மற்றும் தேசிய நெடுஞ்சாலையை உருவாக்கி கடல்சார் பொருளாதார மண்டலம் ஒன்றையும் ஏற்படுத்தி அதன் மூலம் தூத்துக்குடியையும், கடலோர பகுதிகளையும் மேம்படுத்தலாம் என்று சுப்பிரமணியசாமி கூறினார்.