மஞ்சள் காமாலை தடுப்பூசி போடும் திட்டம்: கருணாநிதி நாளை துவ‌க்கி வைக்கிறார்!

சனி, 5 ஜனவரி 2008 (11:24 IST)
கருணாநிதி அரசு மரு‌த்துவமனைக‌ளி‌ல் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோய்க்கான தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி துவ‌க்கி வைக்கிறார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் தடுப்பூசி திட்டத்தின் மூலம் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், போலியோ, காசநோய், தட்டம்மை மற்றும் ரணஜன்னி ஆகிய நோய்களை தடுக்க முறையான தவணைகளில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் பயனாக, தமிழ்நாட்டில் இந்த நோய்கள் முற்றிலுமாக குறைக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து திட்டத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதால், மத்திய அரசு மஞ்சள் காமாலை தடுப்பூசியை நடைமுறைப்படுத்த தமிழ்நாட்டை தேர்வு செய்துள்ளது. மஞ்சள் காமாலை தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னிலை பெறச்செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

மஞ்சள் காமாலை நோய் ஹெப்படைட்டிஸ்- பி வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இது கல்லீரலை தாக்கி பின் மரணத்தை உண்டாக்க கூடிய ஆபத்தான நோயாகும். கல்லீரல் புற்று நோய்களில் 80 சதவீதம் இந்த வைரசால் ஏற்படுகிறது. இந்தியாவில் ஏறக்குறைய 4 கோடியே 50 லட்சம் பேர் இந்த நோய் தொற்று உள்ளவர்களாகவும், அவர்களில் 1 கோடிக்கு மேற்பட்டவர்கள் நோய் பாதிப்புக்கும் ஆளாகிறார்கள். தமிழ்நாட்டில் சுமார் 6 லட்சம் பேர் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

பசியின்மை, சோர்வு, வாந்தி, வயிற்றுவலி, தோலில் தடிப்புகள் (தோல், கண், சிறுநீர் மஞ்சள் நிறத்துடன் காணப்படுதல்) மற்றும் மூட்டு வலி ஆகியன இந்நோயின் அறிகுறி ஆகும். ஹெப்படைட்டிஸ்- பி வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு ரத்தம், உமிழ்நீர் மற்றும் பிறப்பு உறுப்புகளிலிருந்து வெளிவரும் திரவங்கள் மூலம் பரவுகிறது. இந்த நோயிடம் இருந்து பாதுகாப்பு பெற வசதியுள்ள பெற்றோர்கள் தனியார் மரு‌த்துவ‌ர்க‌ள் மூலம் தங்கள் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை- பி தடுப்பூசி போட்டு கொள்கின்றனர். விலை கூடுதலான இந்த தடுப்பூசியை எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்க செய்ய வேண்டும் என்ற உரிய நோக்கத்துடன் தமிழக அரசு வரும் 6ஆ‌ம் தேதி முதல் இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் ரூ.7 கோடியே 20 லட்சம் செலவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த தடுப்பூசியை குழந்தை பிறந்த உடன் அல்லது 15 நாட்களுக்குள் முதல் தவணையாகவும், 6-வது வாரம் 2-ம் தவணையாகவும், 14 வாரம் 3-ம் தவணையாகவும் கொடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மஞ்சள் காமாலை-பி தடுப்பூசி போடப்படும். ஆண்டு ஒன்றுக்கு சுமார் 12 லட்சம் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மஞ்சள் காமாலை- பி தடுப்பூசியால் பயனடைவார்கள்.

மேலும், ஒரு முறை மட்டுமே உபயோகிக்கத் தக்க ஊசிக் குழல்கள் மூலம் மஞ்சள் காமாலை பி-தடுப்பூசி போடப்படுகிறது. அனைத்து பெற்றோர்களும் ஒரு வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் மூன்று தவணைகள் மஞ்சள் காமாலை-பி தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். முதல்-அமைச்சர் கருணாநிதியின் பெரு முயற்சியால் தமிழகத்துக்கு இந்தத் திட்டம் கிடைத்துள்ளது. இதை ஜனவரி 6ஆ‌ம் தேதி (நாளை) அவர் துவ‌க்‌கி வைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்